பிரதமர் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம்….

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவிலை என புகார் வந்தநிலையில் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த திங்கட்கிழமையன்று சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்தார். ஐஐடி-யில் மோடி பேசியதை சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

ஆனால், அரசு தொலைக்காட்சி நிறுவனமாக தூர்தர்ஷன் மோடியின் உரையை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பிரதமர் அலுவலகம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் விளக்கம் கோரியுள்ளது.

பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தூர்தர்ஷன் மூத்த அதிகாரிகளுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

தூர்தர்ஷன் தரப்பு அளித்த பதிலில், மோடி உரை நிகழ்த்திய இடத்திற்குள் தாங்கள் அனுமதிக்கப்படுவதில் சிக்கல் எழுந்ததால் உரையை நேரடி ஒளிபரப்பு செய்யமுடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

“நாங்கள் பிரதமரின் உரையை நேரடியாக ஒளிபரப்பவில்லை. இது ஒரு தேசிய நிகழ்வாக இருந்ததால் இது டி.டி நேஷனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அதை டி.டி பொதிகையில் ஒரு செய்தித் தொகுப்பாக அளித்தோம்.

தேசிய நிகழ்வு பற்றிய செய்திகளை நாங்கள் எப்போதும் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை” என என்று டி.டி பொதிகை (செய்தி) ஆசிரியர் குழுவின் கூடுதல் இயக்குநர் விஜயன் கூறியுள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் உரையை நேரடி ஒளிபரப்பு செய்யாத காரணத்திற்காக சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.