மோடியைப் போல் இதற்கு முன்னர் எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக கர்நாடகா சென்றிருந்த அவர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடியைப் போல் இத்தனை தரக்குறைவாக இதற்கு முன்னர் எந்தப் பிரதமரும் விமர்சித்ததில்லை. எதிர்க் கட்சிகளை விமர்சிப்பதிலேயே அவர் பெரும் பகுதி நேரத்தை செலவிட்டு வருகிறார். மிக மோசமான மொழிகளாலும், கருத்துகளாலும் விமர்சிக்கிறார். மோடி அரசின் பேரழிவை ஏற்படுத்தும் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் நாடு மீள முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் மீதும், பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் மக்கள் முற்றிலும் நம்பிக்கையை இழக்கும் நிலையை மோடி அரசு ஏற்படுத்தி விட்டது. 2013 செப்டம்பரில் 28, 416 கோடி ரூபாயாக இருந்த நிதி முறைகேட்டின் அளவு 2017 செப்டம்பரில் மூன்று மடங்கு அதிகரித்து, ஒரு லட்சத்து 11 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் கடும் துயருக்கு ஆளாகி உள்ளனர். இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்கலை இந்த நாடு எப்படி எதிர்கொண்டு மீளப் போகிறதோ என்ற வேதனை எனக்கு ஏற்படுகின்றது. மோடி அரசின் மிகப்பெரிய இரண்டு தவறுகள் பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரி விதிப்பும் ஆகும். நல்ல நோக்கத்துடன் அனைத்தையும் செய்வதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் செய்த நன்மைகளால் நாடு மிகப்பெரும் இழப்பை சந்தித்ததிருக்கிறது. இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. தனி ஒருவர் மட்டும் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து விட முடியாது. பிரதமர் மோடி கர்நாடகாவிடம் பாடம் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.”
என பிரதமர் மோடியை கடுமையாக விளாசித் தள்ளி உள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
Modi ‘Has Stooped Low’, Misused Office Of Prime Minister: Manmohan Singh