பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம் என கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
மோடி படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.
எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.
இது குறித்து நேற்று படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய் கூறுகையில், ‘இந்த படத்தை ஏன் இந்த அளவு சிலர் எதிர்க்கின்றனர்? என புரியவில்லை.
மூத்த மற்றும் பிரபல வக்கீல்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் இது போன்ற சாதாரண படத்திற்கு தடை கோரி மனு அளித்ததும் ஏன்? என தெரியவில்லை.
இவர்கள் மோடியின் படத்திற்கு பயப்படுகிறார்களா?அல்லது காவலாளியின் தடியை கண்டு பயப்படுகிறார்களா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
இந்த படம் மார்க்கெட் இழந்த நடிகர், தோல்வியடைந்த தயாரிப்பாளர், மற்றும் தான் ஜீரோ என நிரூபித்த ஒருவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
இந்த படம் கருப்புப்பணத்தினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என நிச்சயம் விசாரிக்க வேண்டும். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளோம்.