முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர்.

பிரதமர் மோடி நேற்று தியானம் செய்த குகை கேதார்நாத் கோவிலின் கண்கவர் தோற்றம் அற்புதமாக தெரியும் வகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த குகை இயற்கையாக அமைந்ததாகும்.

இருப்பினும் அதில் பாறைகளை வெட்டி, நன்கு வெளிச்சம் வரும் வகையிலும் மின்சாரம், குடிநீர், கால் பெல் எனப்படும் அழைப்பு மணி, தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கண்காணிப்புக்காக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மோடி தியானத்தில் இருந்தபோதும், நேற்றிரவு தங்கியிருந்தபோதும், குகைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் இருந்தபடி, பாதுகாப்புக் குழுவினர் கண்காணித்தபடி இருந்தனர்.

கேதார்நாத் கோவில் அருகே குகையில் பிரதமர் மோடி தியானம் செய்ததது, பல லட்சக் கணக்கானோர் அங்கு வருவதற்கு ஈர்ப்பாக அமையும் என கோவில் பூசாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கேதார்நாத் கோவிலை சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் தியானக் குகைகள் அமைக்கலாம் என்பது பிரதமர் மோடி கூறிய யோசனை என்று, உத்தரகாண்ட் அரசின் கீழ் வரும், Garhwal Mandal Vikas Nigam அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அமைக்கப்பட்ட ருத்ரா தியானக் குகைக்கு தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும்,

எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் வராததால் 990 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குகையில் தங்குபவர்களின் தேவைக்கேற்ப தேநீர், உணவு போன்றவையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.