பாஜகவின் கொள்கை மாறாது எனினும், உத்திகள் தேவைக்கேற்றபடி மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்ககாக இரண்டு முழக்கங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி என்ற பொருளில் அஜய் பாரத் என்ற முழக்கத்தையும், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதைசெலுத்தும் வகையில்அடல் பிஜேபி என்ற கோஷத்தையும் மக்களவை தேர்தலுக்காக பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது குறித்து விமர்சித்த பிரதமர், கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார். இதுவே பாஜகவின் வெற்றி என்றும் மக்கள் தங்களது திட்டங்கள், கட்சி, தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியை விட சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார். பாஜகவின் கொள்கைகள் என்றும் மாறாது ஆனால், யுக்திகள் நேரத்தற்கு தகுந்தவாறு மாறும் என்றும் மோடி தெரிவித்தார். அடுத்த தேர்தலில் மக்களைக் கவரக்கூடிய அறிவிப்புகளை வெளியிடுதல், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர விடாமல் ஊடாடிப் பிரித்தல் போன்ற யாரும் எதிர்பாராத அதிரடிக் காய் நகர்த்துதல்களை பாஜக தொடங்கிவிட்டதன் அடையாளமே மோடியின் இந்தப் பேச்சு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Modi Starts his Election game