”கரோனாவிடம் சரணடைந்துவிட்டார் மோடி” : ராகுல் காந்தி விமர்சனம் ..

கரோனா வைரஸைத் தோற்கடிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. போரிட மறுத்து, கரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 18 ஆயிரத்து 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர் .

கடந்த 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்தியாவில் கரோனாவால் 2 லட்சத்து 99 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக உலக நாடுகள் லாக்டவுன் கொண்டுவந்து கட்டுப்படுத்தியதையும், இந்தியா லாக்டவுன் கொண்டுவந்ததையும் ஒப்பிட்டு வரைபடங்களை ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் கரோனா வைரஸ் குறையவில்லை, மாறாக பொருளதாாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதற்கான வரைபடத்தையும் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 5 லட்சத்தைக் கடந்ததுள்ளது. 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நாட்டின் பல்வேறு புதிய பகுதிகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸைத் தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை.
பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். கரோனா வைரஸுடன் போரிட மறுத்து, அதனிடம் மோடி சரணடைந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ஐசிஎம்ஆர் குழு, கரோவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றுடன் எந்தக் கூட்டமும் அரசு நடத்தவில்லை என்று ஒரு இணையதளம் வெளியிட்ட கட்டுரையையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.