
இந்திய பிரதமர் மோடி சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று கிளம்பிச் சென்றார். பயணத்துக்கு முன்பாக பிரதமர் மோடி கூறியதாவது: “பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் சவுதி அரேபியாவுக்குச் செல்கிறேன். சமீப ஆண்டுகளில் மூலோபாய ஆழத்தையும், உத்வேகத்தையும் பெற்றுள்ள சவுதி அரேபியாவுடனான நீண்டகால வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது.
நாங்கள் ஒன்றாக இணைந்து பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளோம். பிராந்திய அமைதி, வளமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவைகளில் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பகிர்ந்துள்ளோம்.
கடந்த பத்தாண்டுகளில் இது எனது மூன்றாவது சவுதி அரேபிய பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான ஜெத்தாவுக்கு முதல் பயணமாகும். எனது சகோதரர் இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2023 வெற்றிகரமான இந்திய பயணத்தின் அடிப்படையில் 2வது மூலோபாய கூட்டாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவும், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையோன உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பினைச் செய்வதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும், இரண்டு நாடுகளுக்கு இடையே வாழும் இணைப்பு பாலமாகவும், கலாச்சாரம் மற்றும், மனித உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்து வரும் சவுதி அரேபியாவில் வசிக்கும் துடிப்பான இந்தியச் சமூகத்தினரை சந்திக்கவும் ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.