பிரதமர் நரேந்திர மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஆகிய மோடிக்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாகச் சாடியுள்ளார்
ஹைதராபாத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது தேசிய மாநாட்டில், கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் வங்கியில் கடன் பெற்றுத் தப்பி ஓடிய வைரவியாபாரி நிரவ் மோடி, ஐபிஎல் முன்னாள் தலைவர் நிரவ் மோடி ஆகிய மோடிக்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்த நாட்டில் பல மோடிக்கள் இருப்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால், இதில் கொள்ளையடிக்கும் மோடிக்களை மட்டுமே மக்களுக்குத் தெரியும்.
பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது, விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். ஆனால், அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. மாறாக, மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ரூ.3 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.
வங்கியில் இருக்கும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு ஓடுபவர்களைத் திரும்ப கொண்டுவர அரசால் முடியவில்லை.
மகாபாரதத்தில் வரும் துரியோதனன், துச்சாதனன் போல பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும். மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் இருந்தாலும், அதில் பெரும்பாலானவர்களை யாருக்கும் தெரியாது.
மக்களுக்குத் தெரிந்தது துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டுமே தெரியும். அதேபோலத்தான் பாஜகவில்,யாரையும் மக்களுக்கு தெரியாது. நரேந்திர மோடியையும், அமித் ஷாவை மட்டுமே அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ், வகுப்புவாத சக்திகளை தோற்கடித்து, ஒருமைப்பாட்டை காக்க வேண்டும்.
நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.இந்த வன்முறைச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ், பாஜக பின்புலத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
ஆனால், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்போடுகிறார்கள். பெண்களும், குழந்தைகளும் இதுபோன்ற வன்முறையை எந்த அரசிலும் எதிர்கொண்டதில்லை.
இவ்வாறு யெச்சூரி தெரிவித்தார்.