சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசி முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நிலாவை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் நிலவை நெருங்கி விட்ட நிலையில், தற்போது அதன் சுற்றுவட்டப்பாதை 5வது மற்றும் கடைசி முறையாக மாலை 6.21 மணியளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 30 தேதி சந்திரயான் விண்கலத்தின் நிலவைச் சுற்றும் இடைவெளி 124 கிலோ மீட்டராக குறைக்கப்பட்ட நிலையில்
தற்போது 5வது மற்றும் கடைசி முறையாக நிலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான்-2 நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இனி இந்த சுற்றுவட்டப்பாதையில் அடுத்த ஓராண்டு காலம் அந்த விண்கலம் நிலாவை சுற்றி வரும்.
இன்றிரவு சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரியும் விக்ரம் விண்கலம், வருகிற 7-ஆம் தேதி நிலாவில் தரையிறங்குமென இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் கலம் தரையிறங்கிய பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், சந்திரயான்-2 அடுத்த ஒரு ஆண்டு காலம் நிலாவை சுற்றி வந்து ஆராயும்.
இதன்மூலம் இந்தியா விண்வெளியில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைக்க உள்ளது