முக்கிய செய்திகள்

மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…

நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து நம்பிக்கை அடைந்த முஸ்லிம் பெண்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாகப் பெண்களை நியமிக்கவும் அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

இது தொடர்பாக என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

”புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

அனைத்து வயதில் உள்ள பெண்களும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு.

சபரிமலையைப் போன்று, மசூதிகளிலும் அனைத்துப் பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது குறித்து நாங்கள் எங்கள் வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம்.

தற்போதுள்ள நிலையில், ஜமாத் இ இஸ்லாமி, முஜாஹித் மசூதிகளிலும் மட்டுமே பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சன்னிப்பிரிவு மசூதிகளில் பெண்களுக்கு இன்னும் தடை இருக்கிறது.

அவ்வாறு சில நேரங்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்கென பிரத்யேக வாயில்கள் இருக்கின்றன.

அதன்வழியேதான் வர வேண்டும். எங்களின் கோரிக்கை பாலியல் பாகுபாட்டை முறியடிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் மசூதிகளில் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

புனித மெக்கா நகரில் கூட தொழுகை நடத்தும்போது இதுபோன்ற பாலினப் பாகுபாடுகள் இல்லை. காபாவில் கூடப் பெண்களும், ஆண்களும் நம்பிக்கையுடன் ஒன்றாகத் தொழுகை நடத்துகிறார்கள்.

அப்படிஇருக்கும்போது, நம்நாட்டில் உள்ள மசூதிகளில் மட்டும் ஏன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

இறைத்தூதர் முகமது நபி தனது மனைவியை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதித்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

முஸ்லிம் சமூகத்தில் நன்கு கற்றறிந்த பெண்கள் இருந்தாலும் அவர்கள் மசூதிகளில் இமாம்களாகப் பணியாற்ற மறுக்கப்படுகிறது. இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும்”.

இவ்வாறு ஜுஹாரா தெரிவித்தார்.