வெளிப்படைத் தன்மையுள்ள வெள்ளை மாளிகை: ட்ரம்ப் டமாரம்

அதிபர் தேர்தல் முறைகேடு புகார் விவகாரத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, ரஷ்ய உளவுத்துறை சமூக வலைத்தளங்கள் மூலம் உதவியதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (Robert Mueller) தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் சட்ட ஆலோசகர் டான் மைக்கன்(Don McGahn)னிடம் இந்த சிறப்புக்குழு 30 மணிநேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, டான் மைக்கன் சிறப்பாக ஒத்துழைத்ததாக விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், வரலாற்றில் இல்லாத வகையில் வெள்ளை மாளிகை இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாகவும்,  விசாரணைக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதிகாரிகள் அனைவரையும் தான் முன்பே கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் தேடி அலையும் கூட்டுச் சதியும் இல்லை, எதையும் மறைக்கவும் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வரிசையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அதிபர் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரியையும், அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சியையும் கடுமையாக சாடியுள்ளார். விசாரணை நடத்தும் ராபர்ட் மில்லரையும் ட்ரம்ப் விட்டுவைக்கவில்லை. வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணை ட்ரம்பை மிகவும் ஆத்திரமடைய வைத்திருப்பதாக அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 ​

Most transparent in white house history: Trump

 ​