இசையில் மயங்கி, தமிழில் முயங்கி….
__________________________________________________________________________________________________
என் பள்ளி தமிழாசிரியர் துரைசாமி ஒரு மேற்கோள் ஒன்றைச் சொன்னார். அந்த வார்த்தைகள் எந்த இலக்கியத்தில் இருப்பவை என்று அப்போது தெரியாது. மாட்சியில் பெரியாரை வியத்தலும் இலமே… சிறியாரை அதனினும் இகழ்தலும் இலமே.. இந்த கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்என்று ஆர்வம் வந்தது. இந்த வரிகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்தான் என்பது பிறகுதான் தெரியவந்தது.
தோழர் ஜீவாவின் பேச்சைக் கேட்ட பிறகு தொடர்ந்து நூல்களைப் படிப்பதும் பேச்சுகளைக்கேட்பதும் பழக்கமாயிற்று. ம.பொ.சி.யின் அரசியல் பேச்சுகள், இலக்கியக் கட்டுரைகள் என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக வடக்கெல்லை தெற்கெல்லை போராட்டங்கள்.. தமிழ் பயிற்றுமொழியாக அலுவலக மொழியாக நீதிமன்ற மொழியாக மாறவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுக்காக அவர் நடத்திய கூட்டங்கள்பெரும்ஆளுமை செலுத்தின.
அவருடைய சிலப்பதிகார உரைகள்மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. அதன்பின், கம்பர் விழாக்கள் என்னைப் பெரிதும் ஆட்கொண்டன. எங்கே கம்பர் விழா நடந்தாலும் அங்கே போவது என்ற வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். குறிப்பாக ஆண்டுதோறும் காரைக்குடி கம்பன் விழாவுக்கு மூன்று, நான்கு நாள்கள்செல்வது வழக்கமாயிற்று.
மிகப்பெரும் தமிழறிஞர்களை கேட்கவும் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தது. அ.ச.ஞா, எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராதாகிருஷ்ணன், ரா.ய.சொ, கி.வா.ஜ, பாலுசாமி இதுபோன்ற பலர் அதில் தொடக்கநிலை பேச்சாளர்களாக இருந்தார்கள். சுதா சேஷய்யன், ப.சிவகாமி போன்றவர்களும் இருந்தார்கள். அதற்குப்பிறகு திருவையாறு இசைவிழாவில்கவனம்கூடியது.
என்னுடைய பெற்றோர் இசையில் நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.என்னுடைய பாட்டி இசைப்போட்டியில் கலந்துகொண்டு திருவாங்கூர் மகாராஜா முன்னிலையில் பாடி பரிசு பெற்றவர். அதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் சாகும் வரையில் ஏழு சக்கரம் உதவி பெற்றுக்கொண்டிருந்தார்.
அதேபோல என்தாய்மாமா மிகப்பெரிய இசை ரசிகர். அப்போதுதான்
தந்தையார், எங்கள்வீட்டுக்கு ரேடியோ ஒன்றை வாங்கிவந்தார். அதன்மூலம் இசைவிழாக்கள் நடக்கும்போது பல வித்வான்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. மதுரை மணி, செம்மங்குடி, துறையூர், ராஜகோபால சர்மா, முசிறி சுப்ரமணிய அய்யர், ஆலந்தூர் சகோதரர்கள், எம்எல்வி, என்.சி. வசந்தகோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.மாரியப்பா, தண்டபாணி தேசிகர், டி.கே.பட்டம்மாள் போன்ற இசைவாணர்களின் இசையைக்கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். பிற்காலத்தில் திருவையாறு இசை விழாவுக்கு ஆண்டுதோறும் மூட்டைக் கட்டிக்கொண்டு போவதுபோன்ற வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். படிக்கும் பழக்கம் டமாரம், கல்கண்டு ஆகியவற்றில் தொடங்கி, விகடன், கல்கி என வளர்ந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் தொடரை வாரந்தோறும் படிக்க என்அண்ணன், அக்கா இடையே பெரும்போட்டியே நடக்கும்.
அதற்குப்பிறகு நெய்வேலியில் பணியில்சேர்ந்த பின்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழியாக பொதுவுடைமை இலக்கியவாதிகளைச் சந்திக்கவும் கேட்கவும் வாய்ப்புப் பெற்றேன். ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, நா.வானமாமலை இவர்கள் ஒருபுறமும், ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்வழியாக தி.க.சண்முகம், கவி.கா.மு.ஷெரிப், பு.சா.கி, கு.மா.பா, கவிஞர் வானம்பாடி, தமிழ் ஒளி போன்றவர்களும் திரைப்படத்துறை சார்ந்த ஏ.பி.நாகராஜன், எம்.ஏ.வேணு போன்ற ஆளுமைகளை எல்லாம் சந்திக்கும் தருணம்வாய்த்தது.
நெய்வேலியில் கலை இலக்கிய மன்றம் என்றொரு அமைப்பு இயங்கிவந்தது.
அதற்கு எதிர்பாராதவிதமாக நான் செயலராக நியமிக்கப்பட்டேன். ஓர் இலக்கிய அமைப்பை நடத்தவேண்டிய பொறுப்பு கிடைத்தது. அதில் முதன்முதலில் அழைக்கப்பட்டவர் புலவர் கீரன். பின்னர் அ.ச.ஞா, அ.சீனிவாச ராகவன், எஸ்.ஆர்.கே, குன்றக்குடி அடிகளார், அவ்வை நடராசன், நடேச முதலியார், நீதிபதி எஸ்.மகாராஜன். காவல்துறை ஐ.ஜியான சூ.மி.டயஸ். பி.சிறி.ஆச்சார்யா, சோ.சத்தியசீலன், அறிவொளி, நாவலர் நெடுஞ்செழியன், நா.பார்த்தசாரதி, பி.எஸ்.ராமய்யா போன்றவர்களை எல்லாம் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
இதன் மூலம் இடதுசாரி இலக்கியம், ரஷ்ய இலக்கியம் போன்றவற்றைப் பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. இந்த இலக்கிய மேடைகளோடு தொழிற்சங்க தொடர்புகளும் உருவாயின. இதனுடைய நீட்சியாக தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட செயலராக, மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்தேன்.
பயணம்தொடரும்…
தொகுப்பு: சுந்தரபுத்தன்