முக்கிய செய்திகள்

செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டு வழிச் சாலைக்காக நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை படம்பிடித்த சன் நியூஸ் செய்தியாளரை தடுத்ததுடன், ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசினுடைய செய்திகளை மட்டுமல்ல, மக்களின் குரலையும் எதிரொலிப்பதுதான் ஊடகத்தின் பணி. இதனை செய்ய விடாமல் தடுப்பதும், செய்தியாளர்கள் மீது தாக்குதலை அரங்கேற்றுவதும் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். ஊடகங்கள் வாயிலாக மக்களின் உணர்வுகள் வெளிப்பட்டுவிடாமல் தடுக்கும் தமிழக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜேர்னலிஸ்ட்ஸ் – எம்.யூ.ஜே) கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUJ Condemned Attack on Jounalist