முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணை : ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி …

முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட 7 நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை சுமார் 123 ஆண்டு பழமையானது. இந்த அணை உடைந்துவிட்டால், மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என தொடர்ந்து கூறி வரும் கேரள அரசு,

தற்போதுள்ள அணைக்குப் பதிலாக, பீர்மேடு தாலுகா, மஞ்சமலைப் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளது.

சுமார் 174 அடி உயரத்தில் புதிய அணையை கட்டுவதற்கான அனுமதி கோரியுள்ள கேரள அரசு, 82 அடி உயரத்தில் துணை அணை ஒன்றையும் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.