“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி : துரைமுருகன் கண்டனம்..

“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி அளித்து மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது”

“இதனை தடுக்க மாநில அரசு வழக்குத் தொடர வேண்டும்”

-முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான திரு. துரைமுருகன் அறிக்கை!

தென்தமிழகத்தின் பாசனத்திற்கு ஜீவாதாரமாக விளங்குகிற முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, இரு மாநில நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பென்னி க்விக் அவர்களால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு பாசன வசதி செய்து தருவதுடன் குடிநீர்த் தேவையையும் பெருமளவு நிறைவேற்றி வருகிறது.

சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த அணை கேரள மாநில எல்லைக்குட்பட்டதாக மாறியதால், நீர் தேக்குவது குறித்து தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாலும், வல்லுநர் குழுக்களின் ஆய்வு முடிவுகளாலும் 142 அடிக்கு நீர் தேக்கி வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

முல்லைபெரியாறு அணையின் முழுகொள்ளளவு 152 அடி என்றநிலையில், அதிமுக ஆட்சியில்அது 136 அடியாக குறைக்கப்பட்டுதமிழக விவசாயிகளின் நலன்பாதிக்கப்பட்டது.

அதனைசட்டரீதியாக மீட்டு 142 அடிக்கு நீர்தேக்கிடும் உரிமையைநிலைநாட்டியவர் தலைவர்கலைஞர் என்பதைநினைவூட்டுகிறேன்.

அணையின் மொத்த கொள்ளளவான 152 அடி வரை நீரைத் தேக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், தற்போதுள்ள நிலைமையும் பறிபோகுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது, கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ள அவசர அனுமதி.

இந்த அனுமதியினால், புதிய அணைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையை செயல்பட முடியாமல் செய்து, தகர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற பயமும் தமிழக தென்மாவட்ட விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு திட்டமிட்டுள்ள புதிய அணை பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது. இந்த அணை என்பது தற்போது உள்ள அணையிலிருந்து வெறும் 1200 அடி கீழ்திசையில் அமைக்கப்படுகிறது.

இதனால், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம். புதிய அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1214 அடி என்றும் இதற்கு துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.

இதன் மூலம் சேமிக்கப்படும நீரின் 0.017 டி.எம்.சி மட்டுமே. ஆனால், அதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளும் அதற்குத் தேவைப்படும் நிலமும் யானைகள் சரணாலயம் உள்ள வனப்பகுதியையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடியதாக உள்ளன.

கேரள மாநிலம் அண்மையில் எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த அணை என்பது மலையாள மக்களுக்கும் ஆபத்தை உருவாக்கக் கூடியதாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முல்லை பெரியாறு அணையினால் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

புதிய அணை கட்டினால் தமிழகத்தின் தண்ணீர்த் தேவை பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்குமான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதை சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும்.

தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும்.

எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்படி அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.

இரு மாநில மக்கள்-விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு புதிய அணை முயற்சியைக் கைவிடவேண்டும் என முதல்வர் பினரயி விஜயனை தி.மு.கழகம் கேட்டுக்கொள்கிறது.

பசும்பொன் தேவர் குருபூஜை : தங்க கவசம் ஒப்படைப்பு..

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Recent Posts