மும்பையில் 5 பேர் பலியான விமான விபத்தின் போது, கண் முன்னே ஒருவர் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்க முடிந்தும் யாராலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மும்பையின் ஜூஹூ (JUHU) விமான தளத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், காட்கோபர் என்ற இடத்தில்கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த ஜக்ருதி என்ற கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கட்டிடத்தில் மோதிய வேகத்தில் தீப்பற்றியது. பிற்பகல் 1.10 மணியளவில் விபத்து நேரிட்ட நிலையில், பற்றி எரிந்த நெருப்பு அரை மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விமானத்தில் பயணித்த விமானிகள் பிரதீப் ராஜ்புத், மரியா, பொறியாளர் சுரபி, தொழில்நுட்ப வல்லுநர் மனீஷ் ஆகியோருடன் அடையாளம் தெரியாத மற்றொருவரும் உயிரிழந்துள்ளார். விபத்து நேரிட்ட இடத்துக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்திலேயே மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் அமைந்துள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து புகைமூட்டம் பரவியதால், மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூடப்பட்டு, இரண்டாவது ஓடுதளத்திலிருந்தே விமான சேவைகள் தொடங்கின.
விபத்து நேரிட்ட இடத்துக்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நவிசும், விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி 90 (Beachcraft King Air C 90) என்ற அந்த விமானம், குட்கா வியாபாரி தீபக் கோத்தாரி என்பவரது யூ ஒய் ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பிரதேச மாநில அரசிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த விமானத்தை 1995 ஆம் ஆண்டில் புதிதாக வாங்கியுள்ளது. 12 இருக்கைகள் கொண்ட இந்த சிறிய ரக விமானம், சோதனை ஓட்டத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது விபத்து நேர்ந்துள்ளது
விமானத்தை இயக்கிய பெண் விமான ஓட்டுனர், மக்கள் வசிக்கும் கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக விமானத்தை இயக்கி பல உயிர்களை காத்துள்ளார் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்க்த்தில் பதிவிட்டிருந்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் அருகே விழந்தவர் உயிருடன் எரிந்ததைப் பார்த்தும் யாரும் அருகில் சென்று காப்பாற்ற இயலவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
Mumbai Plan Crash