ஜெ., குறித்த விமர்சனம்; ம.நடராஜனுக்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை..


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

கழகத்தின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகழை சிதைக்கும் வகையில் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதை நடராஜன் நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறோம். ஜெயலலிதா ஆட்சியில் செய்த சாதனைகளை கொச்சை படுத்தும் விதமாக நடராஜன் கருத்துகள் உள்ளன.

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை தான் தயார் செய்து கொடுத்ததுபோல் நடராஜன் பேசியுள்ளார். இது தொடர்ந்தால் எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றேன்.

நடராஜன் ஒரு ‘கிரிமினல்’ என எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர். நடராஜன் அதிமுகவின் கொடியுடன் எங்கும் செல்ல முடியாது, தடுத்து நிறுத்தி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் 2-வது இடம்:

அவர் மேலும் பேசும்போது, “தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை முறையாக பெறுவதற்குதான் மத்திய அரசுடன் தமிழக அமைச்சர்கள் இணக்கமாக இருந்து வருகின்றனர்.

தமிழகத்தை வழி நடத்த ஜெயலலிதா கற்றுகொடுத்து உள்ளார். பொருளாதார வளர்ச்சியில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் தான் உள்ளது.

தேர்தல் தோல்வி ஏற்படும் போது ஒரு சஞ்சலம் ஏற்படும் அந்த அடிப்படையில் மதுசூதனன் கடிதம் எழுதினார், ஆனால் அனைவரும் ஆர்.கே.நகர் தேர்தலில் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர். இதனால் பிரச்சினை இல்லை. இரட்டை இலைக்கும் தினகரன் மற்றும் சசிகலாவிற்க்கு எந்த சம்மந்தமும் இல்லை, அவர்கள் தனி கட்சி தொடங்கினால் கவலை இல்லை” என்றார்.