MeToo புகார்களின் எதிரொலியாக, 7 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை மார்கழி கச்சேரியில் இருந்து சென்னை மியூசிக் அகாடமி அதிரடியாக நிக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் MeToo புகார்களின் எதிரொலியாக, 7 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை மார்கழி கச்சேரியில் இருந்து சென்னை மியூசிக் அகாடமி அதிரடியாக நிக்கியுள்ளது.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை #MeToo என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பின்னணி பாடகியான சின்மயி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, பல பெண்களும் பல்வேறு பிரபலங்களின் மீது புகார்களை சுமத்தி வருகின்றனர். நடிகர் அர்ஜுன், பிரசாந்த் தந்தை தியாகராஜன் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சிலர் இதில் சிக்கியுள்ளனர்.
இருப்பினும், சிலர் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரபலங்களின் மீது பாலியல் புகார்களை கூறி வருவதால், #MeToo மீதான நம்பிக்கைத்தன்மை கேள்விகுறியாகவே உள்ளது.
இதில், சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல், கர்நாடக இசைக் கலைஞர்கள் பலரின் மீதும் பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அப்படி பாலியல் புகார் சுமத்தப்பட்ட, சங்கீத கலாநிதி விருது பெற்ற சித்ரவினா ரவிகிரண், ஓஎஸ் தியாகராஜன், மன்னார்குடி ஏ ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி ராஜா ராவ், நாகை ஸ்ரீ ராம், ஆர் ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் உள்ளிட்ட 7 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை மார்கழி கச்சேரியில் இருந்து நீக்கி சென்னை மியூசிக் அகாடமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்துள்ள சென்னை மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, “MeToo புகார்களின் எதிரொலியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
நீக்கப்பட்டவர்கள் அனைவரும், MeToo-வில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர். எங்கள் துறையைச் சேர்ந்த சில நடுநிலையான உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த விஷயத்தில், ஒரு சங்கமாக நாங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பதை உணர்ந்த பின்னே இந்த நடவடிக்கையை எடுத்தோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என கூறவில்லை.
ஆனால், யார் கச்சேரியில் பங்கேற்கலாம் யார் பங்கேற்க கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது,” என தெரிவித்துள்ளார்.