என் பெயர் ‘ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல’ மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை : ராகுல் திட்டவட்டம்…..

என் பெயர் ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை ராகுல் திட்டவட்டம்

“நான் உண்மையைத்தான் பேசினேன். அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என ஆவேசமாக முழங்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

முன்னதாக நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ராகுல் காந்தி தனது ரேப் இன் இந்தியா கருத்துக்காக மன்னிப்புக் கோர வலியுறுத்தி ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்

இந்நிலையில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி பேசியதாவது:

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். என் பெயர் ராகுல் காந்தியே தவிர ராகுல் சவர்கர் அல்ல. நான் உண்மையைத் தான் பேசினேன்.

உண்மையைச் சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். என் கட்சியிலிருந்து ஒரே ஒரு தொண்டர் கூட அவ்வாறு மன்னிப்பு கேட்டுவிட மாட்டார்.

பிரதமர் மோடி டெல்லியை பலாத்காரங்களின் தலைநகர் எனப் பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எப்போது தேவைப்பட்டாலும் அதை நீங்கள் அறியும் வகையில் ட்வீட் செய்வேன்.

இப்போது வடகிழக்கு மாநிலங்கள் மோடியாலும் அமித்ஷாவாலும் பற்றி எரிகின்றன. அவற்றை மறைப்பதற்கே என் மீது போலி குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை திசை திருப்ப முயல்கின்றனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஓர் ஏமாற்று நடவடிக்கை. பணமதிப்பு நீக்கத்தின்போது மோடி என்ன சொன்னார். கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக உங்களிடம் சொன்னார்.

ஆனால், உண்மையில் உங்கள் பைகளில் இருந்த பணத்தைப் பிடுங்கி அதானி, அம்பானி பாக்கெட்டுகளை அவர் நிரப்பியுள்ளார்.

இந்த தேசத்தை மேம்படுத்துவார்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவார் என்றார் நம்பிக்கையில்தான் மக்கள் மோடியைப் பிரதமராக்கினர். ஆனால் அவரோ எல்லா பணத்தையும் சக்திவாய்ந்த ஊழல் தொழிலதிபர்களிடம் குவித்துள்ளார்.

தனியாளாக இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துவிட்டார். பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்றளவும் இந்தியப் பொருளாதாரத்தால் மீள முடியவில்லை.

இன்று நம் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4% என்ற நிலையில் உள்ளது. அதுவும் பாஜக ஜிடிபி-யை வரையறுக்கும் சூத்திரத்தை மாற்றியமைத்த பின்னர் 4% என்றுள்ளது. ஒரு வேளை பழைய நடைமுறைப்படி கணக்கிட்டால் ஜிடிபி 2.5% என்றளவில் தான் இருக்கும்.

ஒரு காலத்தில் நம் தேசத்தின் ஜிடிபி 9% ஆக இருந்தது. அப்போது சர்வதேச அரங்கில் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு வல்லுநர்கள் பேசினார்கள்.

ஆனால், இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-க்கு விற்பனையாகிறது. சாமான்ய மனிதன் வெங்காயத்துக்காக காத்துக் கிடக்கிறான்.

தொலைக்காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் பிரதமர் மோடியின் விளம்பரம் வந்துவிடுகிறது. 24 மணி நேரமும் ஏதாவது ஒரு சேனலில் அவர் திரையில் தெரிகிறார்.

இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது. இவையெல்லாம் உண்மையில் உங்களைப் போன்ற சாமான்யர்கள் சம்பாதிக்கும் பணம்.

உண்மையில் மன்னிப்பு கேட்க வேண்டியது பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தான். இந்தியப் பொருளாதார பின்னடைவு, தேசத்தைப் பிளவுபடுத்தி வடகிழக்கு மாநிலங்களை எரிய வைப்பது போன்ற செயல்களுக்காக அவர்களே மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.