நான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கி 2ம் ஆண்டில் அடியெடுத்து  வைத்துள்ளடையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றினார்.

பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், நமக்கென்ன என்று இருந்த மக்கள் தற்போது வெளியே வந்திருக்கிறார்கள் என்றும்

அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று தெரிவித்ததோடு தாம் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது என்றார்.

அவர் பேசியதாவது:

நாங்கள் ஆசைப்பட்டோம், பேராசைப்பட்டோம் அந்த ஆசையையும் விஞ்சிக் கடந்து எங்கள் கட்சி இப்போது நம் கட்சி என்று ஆகியிருக்கிறது. இங்கே கொடியேற்றியிருக்கிறோம்,

தமிழகத்தில் பல இடங்களில் கொடி ஏறிக்கொண்டிருக்கிறது. அடுத்து இதை எங்கே ஏற்றி வைக்க வேண்டும் என்ற இலக்கு உங்களுக்குத் தெரியும். அதை நோக்கி நகர்வோம்.

குளத்தடி மீனாக மேலே மழை பொழிகிறது, புயல் அடிக்கிறது என நமக்கென்ன என்று இருந்த மக்கள் இன்று வெளியே வந்திருக்கிறார்கள். காரணம் குளத்தடி மீனுக்குத் தெரியாது வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.

ஆனால் அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது குளம் வேறு நதி வேறு கிடையாது. குளத்து மீன் ஆற்று மீனாக மாறும் அதன் அடையாளம்தான் இங்கே.

தனியே நிற்போம் என்று சொன்னது நான் அல்ல. நிற்போம் என்றால் நாம். மக்கள் பலம் இருக்கிறது, எந்தக் கணிப்பு எப்படிச் சொன்னாலும் மக்கள் என் கையை பிடித்து என் நாடிபார்த்து இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வது புரியவில்லை என்று நேற்றுவரை கூறிக்கொண்டிருந்தார்கள் புரியக் கூடாது என்ற பிரார்த்தனையில் இருந்தவர்கள் அவர்கள்.

இன்று அவர்களுக்குப் புரிய ஆரம்பித்ததற்குக் காரணம் நான் என்னுடைய சுருதியை அதிகப்படுத்தியிருக்கிறேன். அதிகம் என்று கூறும்போது அதிகப்பிரசங்கம் என்று புரிந்து கொள்ளக் கூடாது,

நியாயமான பிரசங்கங்கள் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது தமிழகத்தையும் தமிழகத்தின் ஊழலையும். ஊழலா? எங்கே? என்று நம்மையே கேட்கும் இவர்களுக்குப் பதில் உலகம் தந்து கொண்டிருக்கிறது.

மக்களின் பலம் என்னவென்று நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு இன்று உங்கள் முன்னால் இருக்கிறது, அதில் ஒரு சிறிய கருவியாக நான் உங்கள் முன் நிற்கிறேன்.

இந்தக் கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகம் மேம்படட்டும், நாளை நமதே.