மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சியின் மாளிகை மதில்சுவரின் மீது இன்று (வியாழக்கிழமை) பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது சூச்சி அவரது இல்லத்தில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளான, மாளிகையில்தான் ஆங் சான் சூச்சி 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு சூச்சி ஆரம்பத்தில் மவுனம் காத்து வந்ததற்கு ஐ. நா., சர்வதேச சமூகங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக சூச்சி குரல் கொடுக்க தவறியதால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.