மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது தொடங்கி இதுவரையில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது.
இதற்கிடையே, சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைதுசெய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மியான்மரின் கிழக்குப் பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ராணுவ வீரர்களின் இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்