மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் 2 இணை ஆணையர்கள் அடங்கிய மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக
இந்துசமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வான நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்கள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் மாற்றபட்டதாக ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 52 கதவுகள், அலி கற்கள், விமானத்தின் குஞ்சங்கள் ஆகியவை மாயமாகியுள்ளதாகவும், இதற்கு அறநிலையத்துறை இணை மற்றும் கூடுதல் ஆணையர்களே உடந்தையாக இருப்பதாக யானை ராஜேந்திரனும் வழக்கு தொடர்ந்தார்.
சிலை கடத்தலில் ஈடுபடும் வெளிநபர்கள் காவல்துறையில் சிக்குகின்றனர், சாமிகளின் நகைகளை திருடிய இந்து சமய அறநிலையத் துறையினர் அரசு ஊதியத்தில் சுகமாக இருப்பதாக ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.
அந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
பின்னர் மயிலாப்பூர் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மயிலாப்பூர் விவகாரம் தொடர்பாக மூவர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
அதில் ராமேஷ்வரம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர்களும், அறநிலையத்துறை ஆய்வாளரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் சிலை கடத்தல் தரப்பும் விசாரணையை தொடரலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், அனைத்து விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக இரண்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.