நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடக்கிறது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அளித்தனர்.
மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. முன்னதாக வட்டாட்சியர் அலுவலத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
வேட்பு மனு செய்ய வரும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் என்றும் 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் சாலையிலுள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கலுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மனுத்தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், 2ஆவது நாளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2 ஆவது நாளான இன்றும் ஆர்வத்துடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
இதுவரை 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் கடைசி நாளான இன்று மாலை 3 மணி வரை விருப்ப மனு பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இன்றே விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் 2 ஆவது நாளாக விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மத்திய மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜாராமன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி. சம்பத், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய.ரவிதுரை, விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை நேர்காணல் நடத்தப்பட்டு அன்றைய தினமே திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குசாவடிகளும் நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலை குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் சத்யபிரதா சாகு குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டத்தின் மற்ற இடங்களில் தலா ஒரு பறக்கும் படை மற்றும் நிலை குழு தேர்தல் பணியில் ஈடுபடும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 721 ஆண்கள், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 710 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் உள்ளனர் என்றும்
நாங்குநேரி தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 341 ஆண்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 042 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்