ம.நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி


புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ம.நடராஜனின் உடலுக்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். உடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர் பருவத்திலேயே தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தில் பங்குபெற்றவர். திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக விளங்கினார்’ என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நடராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த பேட்டியில், ‘நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்’ என தெரிவித்தார்.

ம.நடராஜன் மறைவுக்கு நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது இனத்திற்கும் மொழிக்கும் கையெழுத்தாகி காலமெல்லாம் காவியம் செய்தவர் அண்ணன் ம. நடராஜன். தமிழீழக் கொள்கையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற சகலகலாவல்லவன் நடராஜன். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர். நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்துத் தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் என கூறியுள்ளார்.

நடராஜன் உடல் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.