நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
அந்த வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, இன்று (26-ம் தேதி) 11 மணிக்கு தொடங்கியது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:-
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்படும் விகிதத்தில் மற்ற நாடுகளை விட நம் நாடு சிறப்பாக உள்ளது.
இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு. லட்சக்கணக்கான மக்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடிந்தது.
ஆனால் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. இது பல பகுதிகளில் வேகமாக பரவுகிறது.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை.
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நமது ராணுவம் கார்கில் போரில் வென்றது. இந்த நாளை நம்மால் மறக்க முடியாது.
ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது.
கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம். வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவு செய்யவேண்டாம்.
போருக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தானுடன் நட்புறவை கொண்டிருக்க முயன்றது. அது நடக்கவில்லை.
பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.