தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல் காந்தி. ஒரு உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் முயற்சியில் பத்திரிகையாளர்கள் பலர் தங்களது உயிரையும் பணயம்வைத்து களத்தில் நிற்கின்றனர். இத்தகைய பத்திரிகையாளர்களைக் கௌரவிக்கும் நாளாக, இன்று தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து, தனது டவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். மேலும் அவர் தனது பதிவில், “இந்த தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தில், எனது ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துகள். நமது ஊடகத்தின் கடும் உழைப்பு, குறிப்பாக செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் அயராத உழைப்பை நான் பாராட்டுகிறேன். இவர்கள்தான் களத்தில் இறங்கி செய்தி சேகரித்து, நாடு மற்றும் இந்த உலகத்தையே வடிவமைக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளங்கள் வளர்ந்துவருகின்றன. செய்திகளை மொபைல் போன் மூலமே இப்போது பெறுகின்றனர். இம்மாதிரியான வளர்ச்சி, ஊடகத்துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும். மேலும், ஊடகத்துறையின் ஜனநாயகம் மற்றும் பங்களிப்பை அதிகரிக்கும்.
ஒரு துடிப்பான ஜனநாயகம் அமைய, சுதந்திரமான ஊடகம் தேவை. பத்திரிகைச் சுதந்திரத்தை அனைத்து வகைகளிலும் நிலைநாட்ட நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 125 கோடி இந்தியர்களின் திறமை, வலிமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நமது ஊடகத்துறையை நாம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்” என்றார்.