தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உயர்நீதி மன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
கன்னியாகுமரி மகாசபா செயலாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை தமிழக அரசு வழங்குவதுடன் உரிய உத்தரவுகளையும் 8 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.