நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்..

நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. ஆனால் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்வளம் குன்றி விவசாயம் பாதிக்கும் என்பதால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஜெம் லெபாரட்டரி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அந்நிறுவனத்தின் சார்பில், நெடுவாசலுக்கு பதிலாக ஹைட்ரோ கார்பன் எடுக்க வேறு இடத்தை மாற்றித் தர கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.