நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.
இதுதொடர்பாக திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (3-ம் தேதி) காலை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு டெல்லி நாடாளுமன்றம் அருகில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் நடக்கிறது.
தலைவர்கள் பங்கேற்பு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பி.விஸ்வநாதன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.