நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..

நீட் மற்றும் ஜேஇஇ-2020 தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.24) எழுதிய கடிதம்:
“தாங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் இடர்களை, உடனடியாகத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கரோனா வைரஸ் பேரழிவு மட்டுமில்லாது, மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய சமீபத்திய வெள்ளப் பாதிப்புகளில் இருந்தும் பல பகுதிகள் இன்னும் மீள வேண்டியிருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தைச் சமாளிக்கும் முயற்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தற்போது பொதுப் போக்குவரத்திற்கும் தடைகள் உள்ள நிலையில், தேர்வு மையங்களை அனைவரும் அணுக முடியாத சூழல் நிலவுகிறது.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு மையங்களைச் சென்றடைவது இயலாத ஒன்றாகும். இது, வசதி வாய்ப்புப் பெற்றுள்ள அவர்களது சக தேர்வர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பெறும் கெடுவாய்ப்பாகும்.

பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த போதும் கடந்த மார்ச் 24, 2020 அன்று தமிழக அரசால் நடத்தப்பட்ட பிளஸ் 2 வகுப்புத் தேர்வில், ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறவில்லை என்பது இதனைத் தெளிவாக உணர்த்தும்.

இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று தெரிகிறது. அதில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் கரோனா இல்லை என்பதற்கான அல்லது அதற்கான அறிகுறிகள் இல்லை என்பதற்கான சோதனை நடைபெறுவதைத் தேசிய தேர்வு முகமை கட்டாயமாக்கியிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் ஏதுமற்றவர்கள் என்பதன் அடிப்படையில், மாணவர்கள் தாமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது எந்த வகையிலும் பயனளிக்கும் வழியாகத் தோன்றவில்லை.

தேர்வு எழுத வரும் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், நாடு முழுவதும் மீண்டும் ஒரு தொற்று அலை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது. மாணவர்களின் உடல்நலனையும், எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

மேலே குறிப்பிட்ட கடும் இடர்ப்பாடுகளின் அடிப்படையில், கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும்வரை ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.