தேர்வு இடங்களை மாற்றித் தேர்வுக்கு முன்னரே மாணவர்களை உளவியலாகத் தோல்வியடையச் செய்யும் யுக்தி; பலநூறு அனிதாக்களை உருவாக்க முயலும் சதித்திட்டம் தமிழின அழிப்பின் தொடக்கம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெரும் அதிர்ச்சி தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைப் பொசுக்கும் நீட் தேர்வினால் மருத்துவத்தங்கை அனிதாவை இழந்துவிட்டு, அவளது மரணம் ஏற்படுத்திய காயத்தோடும், மன வலியோடும் நீட்டை விரட்டி அவளது இலட்சியக் கனவை நிறைவேற்றப் போராடிக்கொண்டிருக்கிற சூழலில், தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலத்தில் ஒதுக்கியுள்ள செயல் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. திட்டமிட்ட இன அழிப்பு என்பது அவ்வினத்திற்கு மறுக்கப்படும் கல்வி உரிமையிலிருந்து தொடங்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது.
எட்டாக்கனியாக்கும் படுபாதகச்செயல் நீட் மூலமாக மருத்துவக்கல்வியைத் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்காவண்ணம் தட்டிப் பறித்து எட்டாக்கனியாக்கும் படுபாதகச்செயல் அப்படி ஒரு இன அழிப்பின் தொடக்கமாகவே தெரிகிறது. கல்வி எனும் மானுட உரிமையைத் தர மறுக்கும் சனநாயகத் துரோகத்தை மத்திய அரசு தமிழினத்திற்குச் செய்கிறது. போராடிப்பெற்ற சமூக நீதி பச்சைப்படுகொலை செய்திருக்கிறது. ஒரு நாட்டின் எதிர்கால நலன் விவசாயிகளிடமும், மருத்துவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இருக்கிறது. ஆனால் அம்மூன்றுத் தரப்பு மக்களுமே தங்களது வாழ்வுரிமைக்காக இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பது இந்நாடு எட்டியிருக்கிற மிக அபாயகரமான நிலையினைக் காட்டுகிறது.
திட்டமிட்ட சதி தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையங்களைக் கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கியுள்ள மத்திய அரசின் இச்செயல் தமிழக மாணவர்களைத் திட்டமிட்டு மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்ற முனையும் சதி. கிராமப்புற, மலைவாழ் பகுதியில் வாழும் மாணவர்களும் , மிகவும் நலிவடைந்த, பின்தங்கிய பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்ட மாணவர்களும் கேரளாவுக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று தேர்வெழுதுவதென்பது சாத்தியமில்லை என்பது அறிந்து தான் தேர்வு மையங்களைப் பிற மாநிலங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். தேர்வெழுதுவதற்கு முழுமையான, தெளிவான மனநிலை மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. தேர்வு மையங்களை வேறு மாநிலத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களைப் பெரும் மனநெருக்கடிக்குத் தள்ளி அவர்களுக்குத் தேர்வு குறித்த அச்சத்தையும், பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்
கார்ப்பரேட் சதி இவ்வாறு தேர்வெழுதுவதற்குச் செல்வதையே பெரும்பாடாக மாற்றியிருப்பதன் மூலம் தமிழக மாணவர்களைப் பெரும் அலைக்கழிப்புக்குள்ளாகி அவர்களைத் தேர்வுக்கு முன்பே உளவியலாகத் தோல்வியடையச் செய்ய முயல்கிறார்கள். பலநூறு அனிதாக்களை உருவாக்க முயல்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய அநீதி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமே உரியதன்று! இது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அவமதிக்கும் பெரும் வஞ்சகச்செயலாகும். நீட் தேர்வும், அதனைத் தொடர்ந்த இந்நடைமுறைகளும் தமிழர்களை மருத்துவத்துறையிலிருந்து வெளியேற்றி தமிழர்களின் உயிருக்கு உலைவைக்கும் பேராபத்தாகும். வருங்காலத் தமிழ் தலைமுறையின் சுகாதாரமான வாழ்வை இவ்வாறு மருத்துவச் சந்தையாக மாற்றுவதன்மூலம் மருத்துவத்தை வணிகமாக்கி லாபமீட்டத் துடிக்கும் கார்ப்பரேட் சதி இதன் பின்புலத்தில் உள்ளது என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
உயிருக்கே ஆபத்தான செயல் கடந்த 2 நாட்களாக ராஜஸ்தானில் வீசும் புயல் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகியிருப்பதாகவும் மூன்று நாட்களாகப் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்றும் செய்திகள் வருகிறது. அங்கிருப்பவர்களே உடமைகளை இழந்து நிர்கதியாக நிற்கும் சூழலில் இங்கிருந்து மாணவர்கள் சென்று தேர்வெழுதி திரும்புவது உயிருக்கே ஆபத்தான செயலாக முடியும். இப்படி ஒரு அநீதியான முடிவெடுத்து மாணவர்களின் எதிர்காலத்தோடும் உயிரோடும் விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்குக் கூடிய விரைவில் மிகக் கடுமையான தண்டனையை எம்மக்கள் தருவார்கள்.
பெரும் கேடாய் முடியும் தேர்வு மையங்கள் தேர்வு செய்ய நேரமில்லை என்னும் பதில்கள் மூலம் நீட் தேர்வை நடத்துபவர்கள் சரியான திட்டமிடலில் இத்தேர்வை நடத்தவில்லை என்று தெரிகிறது. அதிக மருத்துவக்கல்லூரி இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தேர்வு எழுத இடமில்லை என்பதை எண்ணும் பொழுது தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழர்கள் மீது தொடர்ந்து வன்மங்கொண்டு செயல்படும் மத்திய அரசுகளால் தமிழர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தானா? என்ற கேள்விகளோடு தங்கள் இந்திய அடையாளத்தையே வெறுக்கத்தொடங்கியிருக்கிறார். இது இந்நாட்டுக்கே பெரும் கேடாய் போய் முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
டீ குடிக்கக்கூட பத்தாது மாணவர்கள் தேர்வெழுதச் செல்வதற்கு முன்கூட்டியே செல்ல வேண்டியிருப்பதாலும், வெளிமாநிலத்திற்குக் குடும்பத்தினருடன் செல்வதாலும் பெரும் பொருட்செலவை அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. ராஜஸ்தான் செல்ல 2 நாட்கள் திரும்ப 2 நாட்கள் பரீட்சைக்கு 1 நாள் என 5 நாட்கள் தேவைப்படுகிறது. ஆக 5 நாட்கள் குறைந்தது இருவர் செல்ல தமிழக அரசு அறிவித்திருக்கும் 1000 ரூபாய் என்பது மிக மிகச் சொற்பமான பணம். இது தேநீர் செலவிற்குக் கூடக் காணாது. எனவே, தேர்வெழுதச் செல்லும் மாணவர்களின் முழுச்செலவையும் தமிழக அரசே ஏற்று, அவர்களுக்குரிய வழிகாட்டுதலை செய்வதே உகந்ததாக இருக்கும்.
முழு செலவையும் ஏற்க வேண்டும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்குத் தாராளம் காட்டி செலவுசெய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த செலவுக்குக் கணக்குப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, இராஜஸ்தான், கேரளாவுக்குத் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவர்களது குடும்பத்தினரோடு சேர்த்த முழுச்செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் எனவும், மாணவர்களுக்குப் பொருட்செலவைத் தாண்டி மொழிச்சிக்கலும் இருப்பதால் தமிழக அரசே இதற்கென ஒரு குழுவினை அமைத்து மாணவர்களை மாவட்டவாரியாக ஒருங்கிணைத்து அவர்களைத் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல உரிய வழிவகைகளை வேண்டும் எனவும்,நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.