வட மாநில நீட் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தது மாணவர்களா? சிபிஎஸ்இ விளக்கத்தால் சர்ச்சை..


ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள நீட் தேர்வு மையங்களை தமிழக மாணவர்கள் யாருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒதுக்கவில்லை என்றும், அந்தந்த மாணவர்கள் விரும்பி தேர்வு செய்த மாநிலங்களில் மட்டுமே அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டு நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தாங்கள் தேர்வு செய்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் வட இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, சிபிஎஸ்இ செய்தி தொடர்பாளர் ராமா ஷர்மா அளித்திருக்கும் புதிய விளக்கத்தில், தமிழக மாணவர்கள் தேர்ந்தெடுத்த நீட் தேர்வு மையங்களையே சிபிஎஸ்இ ஒதுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 31 சதவீத தமிழக மாணவர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.
எனவே, 2017ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த 149 நீட் தேர்வு மையங்களை இந்த ஆண்டு 170தாக சிபிஎஸ்இ அதிகரித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களுக்கு இந்த 170 மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கியுள்ளார்.

2017ம் ஆண்டோடு ஒப்பிட்டால், மேலும் அதிகமாகியிருக்கும் 25 ஆயிரத்து 206 மாணவர்களையும் தமிழகத்தில் தேர்வு எழுதச் செய்ய எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டோம்.

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு எழுத விரும்பியோரின் எண்ணிக்கை அதிகரித்ததை உள்வாங்கி கொண்டு நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டோம். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் குறைவாகவே இருந்தன.
அதனால், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த மூவாயிரத்து 685 தமிழக மாணவர்களுக்கு, சென்னையிலுள்ள தேர்வு மையங்களை விட அருகிலுள்ள தேர்வு மையமான எர்ணாகுளம் வழங்கப்பட்டது என்கிறார் அவர்.

முந்தைய ஆண்டுகளில் செய்ததுபோல, பிற மாநிலங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கும் இதே மாதிரி அருகிலுள்ள தேர்வு மையங்களே வழங்கப்பட்டன.

தமிழக மாணவர்கள் தங்களே விரும்பி தெரிவு செய்திருந்தாலே தவிர, ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம், இன்னும் பிற மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ ஒதுக்கவில்லை என்று ராமா ஷர்மா கூறியுள்ளார்.

மேலும், 2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுதுகின்ற 24 ஆயிரத்து 720 தமிழக மாணவர்களில் தமிழ் மொழியில் தேர்வு எழுத தெரிவு செய்திருக்கும் அனைவருக்கும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும்.
அத்தகைய மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிற்குள்ளே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் ராமா ஷர்மா கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு வட மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை என்ற சிபிஎஸ்இ-யின் இந்த கூற்றை, மாணவர்களுக்காக பொது நல வழக்கு நடத்தி, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் மறுத்துள்ளார்.

”இது பொய்யான தகவல். எங்களுடைய மருத்துவ மாணவர்கள் யாரும் வெளிமாநில நீட் தேர்வு மையங்களை தெரிவு செய்யவில்லை.” என்று மயிலவன் கூறினார்.

மேலும், தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை என்று சிபிஎஸ்சி பொய்யான தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து, தீர்ப்பை பெற்றிருக்கிறது என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக, மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.