முக்கிய செய்திகள்

நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க சிறப்புச்சட்டம் கொண்டுவருவது பரிசீலனையில் உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 21) நடைபெற்றுவரும் சட்டமன்றக்கூட்டத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் கொண்டுவருவது தொடர்பான அறிவிப்பை 110விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின்னர் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றார் முதல்வர். வருங்காலங்களில் இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காக சிறப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
சிறப்பு சட்டத்தைக் கொண்டுவர ஏதுவாக அதற்கு தேவைப்படும் புள்ளிவிவரங்களைத் தொகுத்து, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவில் சேர்வதற்கான காரணங்களை மதிப்பீடு செய்து, இந்த நிலையை சரிசெய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கும் என்றார்.

இந்த ஆணையத்தில், பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சட்டம் ஆகிய துறைகளின் முதன்மை அரசுச் செயலர்களும், பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்படும் இரண்டு கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றார். ஆணையத்தில், மருத்துவக்கல்வி இயக்குநர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.