நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாணவிகள் தேர்வில் உண்டான தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வர்கள் மற்றும் தேரியவர்களின் எண்ணிக்கை ஆகியன அதிகமாகியுள்ள போதிலும், நீட் தேர்வு தோல்வி உண்டாக்கிய மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளும், நீட் தேர்வால் தமிழக மருத்துவக் கட்டமைப்புக்கு பாதிப்பு உண்டாவதோடு, பொருளாதார பலம் கொண்ட நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தேர்வடைய முடியும் எனும் விமர்சனமும் தொடர்கிறது.
2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டாலும் தமிழகத்திற்கு ஓராண்டுவரை நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நீட் நடத்தப்பட்டுவருகிறது. இந்த வருடத்தில் நீட் தேர்வின் முடிவு ஜூன் 5ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் இந்தாண்டு 48.57 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சுமார் 9 சதவீதம் அதிகமானது. மொத்தம் 1,23,078 மாணவர்கள் எழுதியதில் 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
இந்த தேர்வில் தோல்வி அடைந்ததற்காக மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வது குறித்து பிபிசி தமிழ், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் பேசியது.
“நீட்” ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்

‘தொடக்கத்திலிருந்தே நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானதாகவே அமைந்தது. பள்ளிப் பொதுத்தேர்வு, அடுத்ததாக நீட் தேர்வு என அடுத்தடுத்து இரண்டு தேர்வுகளை சந்திக்கும்போது மாணவர்களின் அழுத்தம் கூடுகிறது. இந்த நீட் தேர்வு தேவையா என்பதை தமிழக அரசே முடிவு செய்ய வேண்டும். இந்த வருடம் தமிழக அரசு சிறப்பு பயிற்சி அளித்தாலும் அது போதுமானதாக இல்லை,” என்று கூறினார்.

நீட் தேர்வு மருத்துவ மேற்படிப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து பிபிசி தமிழ் அவரிடம் கேட்டபோது, முன்பு மருத்துவ மேற்படிப்பு படிப்பவர்களுக்கு 3 வருடம் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கிராம அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால் நீட் கட்டாயத்திற்கு பிறகு இந்த சேவை அவசியமற்றதாக மாறியுள்ளதால் பல சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையிலிருந்து பயனடையும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்களின் இந்த சேவை பாதிக்கப்படுகிறது. இந்த சேவை சில நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக நிறுத்தப்படும் என்ற அபாயம் இருப்பதாக கூறினார் ரெக்ஸ் சற்குணம்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் மாணவர்களின் தற்கொலை குறித்து பிபிசி தமிழ் பேசியது.
இந்த தற்கொலைகளை வெறும் தேர்வின் முடிவாக பார்க்கக்கூடாது. இதை ஒரு சமூக பொருளாதார பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சமூக போட்டிகள் அதிமாகி வருவதால் அனைவரும் அதை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் படிப்பை தேர்வு செய்கின்றனர்.

மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர் என்று ரவீந்திரநாத் கூறினார்..

ஆனால் இந்தியாவில் மொத்தம் 65,000 எம்.பி.பி.எஸ் இடங்கள்தான் உள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் 14 லட்ச மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கிறார்கள்.

இதற்கு எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிப்பது நேரடியான தீர்வு . அதைத் தவிர வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது, வருமானத்தை உயர்த்துவது,

எல்லா தொழிலுக்கும் சம வாய்ப்புகள் அளிப்பது போன்றவை மறைமுகமான தீர்வு. இது பெற்றோருகளுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் என கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். அவர்களுக்கு போட்டி தேர்வு எழுத சரியான பயிற்சி அளிப்பதில்லை.

இதனால் இந்திய அளவில் போட்டித்தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் சதவீதம் குறைந்து 1 முதல் 2 சதவீதமாக மாறியுள்ளது என கூறினார்.
மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வே வேண்டாம் என்று கூறுவது சரியாகாது. ஆனால் மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ சீட்டுகளுக்கு மாநில அளவிலான தேர்வு போதுமானது.

இந்திய அளவிலான சீட்டுகளுக்கு இந்திய அளவிலான போட்டித்தேர்வுகள் தேவை. அதுமட்டுமல்லாமல் இவ்வாறான போட்டி தேர்வுகளில்

அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு பள்ளியின் அடிப்படையில் செய்தால் மாணவர்கள் சேர்க்கை அதிமாகி பள்ளியின் தரத்தை உயர்த்துவதில் அரசு கவனத்தை செலுத்தும் என கூறினார்.
மருத்துவ மேற்படிப்பிறகு நுழைவுத் தேர்வு வைப்பது சரியே. ஆனால் தகுதித் தேர்வு வைக்க கூடாது. அரசு மருத்துவர்களுக்கு இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளில் ஒதுக்கீடு தருவதனால் கிராமங்களில் மருத்துவ சேவையும் பாதிக்காது என கூறினார்.

இது குறித்து அனிதாவின் அண்ணன் மணிரத்தினதிடம் பிபிசி தமிழ் பேசியது. ”எங்கள் வீட்டில் நடந்தது போன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்று நினைத்தோம்.

ஆனால் கடந்த வருடம் போல இந்த வருடமும் மாணவர்களின் தற்கொலை தொடர்கிறது. இந்த தேர்வின் அழுத்தங்களை மாணவர்களால் தாங்க முடியவில்லை.

நீட் தேர்வு தனியாக நடத்துவதால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனதாக தோன்றுகிறது.

இந்த தற்கொலைகளுக்கு அரசும் சமூகமுமே காரணம். அது போல மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர அது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இதை அவர்களின் பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும்,” என கூறினார்.