நீட், ஜேஇஇ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: சீராய்வு மனுக்கள் தள்ளுபடி …

செப்டம்பர் 13-ல் நீட் தேர்வு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்.13-ம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

நீட் தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் எனப் பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீட் மற்றும் ஜேஇஇ. பிரதான நுழைவுத் தேர்வுகளைக் கரோனா பரவல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளால் ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ‘போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளைக் கண்டிப்பாக நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சிகள், ஆளும் ஆறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல் கரோனா பரவலுக்கு இடையே தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை கஷ்டங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் , இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், 13 ஆம் தேதி தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது, “நாங்கள் சீராய்வு மனுக்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம், மேலும் தகுதி அடிப்படையிலும் இந்த 6 மனுக்களை பரிசீலித்த போது விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுக்களை தள்ளுபடி செய்ய முடிவெடுத்தோம், அதன் படி சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஏப்ரல் 7-11இல் நடைபெற வேண்டியது. ஆனால், கரோனா காரணமாக முதலில் இது ஜூலை 18-23 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. பிற்பாடு கரோனா பரவல் தீவிரமானதையடுத்து செப் 1-6 ஆம் தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு செப்.27 ஆம் தேதி நடைபெறுகிறது. அதே போல் நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதுவும் முதலில் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு பிறகு செப்.13 என்று தேதி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் 6 மாநிலங்களின் அமைச்சர்கள், ஜேஇஇ, நீட் தேர்வுகளால் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்துக்குமே நோய்த்தொற்று அச்சுறுத்தல் உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஜேஇஇ தேர்வுக்கு மொத்தம் 660 தேர்வு மையங்கள், மையம் ஒன்றிற்கு 1,443 மாணவர்கள் பங்கேற்பார்கள். நீட் தேர்வுக்கு 3,843 மையங்கள் உள்ளன. மையம் ஒன்றிற்கு 415 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்வார்கள். இத்தகைய எண்ணிக்கையில் கூடுவதே தொற்று பரவக் காரணமாகிவிடும் என்று 6 மாநில அமைச்சர்கள் மனுவில் சுட்டிக்காட்டினர்.

ஒரு கட்டத்தில் தங்கள் சீராய்வு மனுவில், “வகுப்பறை கற்பித்தல் சுத்தமாக இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் தேசியத் தேர்வுகளை மத்திய அரசு நடத்துவது என்பது அறிவுக்கு விரோதமானது என்பதோடு தன்னிச்சையானது, தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவது தவிர வேறில்லை” என்று வெளிப்படையாகக் கூறினர்.

ஆனாலும் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் செப்.13-ம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு…

ஆசிரியர் தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து…

Recent Posts