நேரு பிறந்த ஊரின் பெயரையே மாற்றிய யோகி ஆதித்யா நாத்!

நேரு பிறந்த ஊரான அலகாபாத் நகரின் பெயரை ப்ரயாக்ராஜ் (Prayagraj) என மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.  

முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்கு முன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உ.பி.அமைச்சர் சித்தார்த்தா நாத் சிங் தெரிவித்துள்ளார். ரிக் வேதம், மகாபாரதம், ராமாயணத்தில் எல்லாம் அலாகாபாத்தின் பெயர் ப்ரயாக்ராஜ் என்றே இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

துறவிகள், சாமியார்கள் பலரும் அலகாபாத்தின் பெயரை ப்ரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

மதச்சார்பின்மையின் அடையாளமாக திகழ்ந்த நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த ஊரான அலகாபாத்தின் பெயர், இந்துத்துவவாதிகளின் விருப்பத்திற்காக மாற்றப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மதச்சார்பின்மையின் சுவடுகளே இருக்கக் கூடாது என பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Nehru’s Allahabad Changed as Prayagraj by Yogi