
பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் தற்போது சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவருக்கும், சுப்பையாவுக்கும் வாகனம் நிறுத்துவதில் இட தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக அந்த பெண், தனக்கு சொந்தமான இடத்தில் வாகனத்தை நிறுத்த வாடகை தரவேண்டுமென்று கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்பையா அந்த பெண்ணை அசிங்கப்படுத்தும் எண்ணத்தில் அவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவாக காட்சிகளும் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்த பெண் ஆதம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், சுப்பையா சண்முகம் தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய முகவசம் உள்ளிட்ட குப்பைகளை வீசிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்கு சான்றாக வீடியோ பதிவையும் அவர் போலீசாரிடம் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் சுப்பையா மீது எடுக்கப்படவில்லை.
இதனால், வீடியோ பதிவுகளை கொடுத்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பெண் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.