புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு…

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழுவை அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தி.மு.க.வின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்மொழித்திட்டத்தை அறிவித்து இந்தியை திணிக்கும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்திதிணிப்பு தொடர்பான வாசகங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்ததாக மு.கஸ்டாலினின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வடிவில் இந்தி திணிப்பில் தீவிரமாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமிக்க மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியிருப்பது முன்னுக்குப் பின் முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித்துறை வல்லுனர்களின் கருத்தை அறிய தி.மு.க. விரும்புவதாகவும்,

விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க தி.மு.க. சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட 9 பேரை கொண்ட ஆய்வுக்குழு பத்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில்

தி.மு.க.வின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.