நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவல் அளித்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு எதிரான வழக்கில் அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து, நித்யானந்தா முறையாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தவறான தகவல்கள் இருப்பதாகவும், சில தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெகதலபிரதாபன் சார்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா தரப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவலை கொடுத்துவந்தால், நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். அப்போது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததுடன், திருத்தப்பட்ட பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினார். இதையடுத்து, பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
முன்னதாக, நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நீதிமன்ற நடவடிக்கைகளை நித்யானந்தாவின் சீடர் நரேந்திரன் என்பவர், செல்போன் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். இதை கண்டறிந்த நீதிபதி, அவரை பிடித்து விசாரிக்க உத்தரவிட்டார். நீதிமன்ற விதிகளை மீறி செயல்பட்டிருந்தால், நித்யானந்தாவின் சீடரை கைது செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.