நிவர் புயல் நாளை அதி தீவிரப் புயலாக மாறி சென்னைக்கு 520 கி.மீ. தொலைவில் உள்ளது. 25-ம் தேதி காரைக்கால், மாமல்லபுரம் இடையே கரையைக் கடப்பதால் மிக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மாலை நேர நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
‘தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்குத் தென்கிழக்கில் சுமார் 520 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து புயலாகவும், நாளை தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி வரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 26-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் நவ.24, 25 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
காற்றின் வேகமானது, மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடல் நிலையைப் பொறுத்தவரையில் 24, 25 தேதிகளில் தமிழகக் கடல் பகுதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பை விட சுமார் 2 மீட்டர் உயரம் வரை உயரக்கூடும். மீனவர்களைப் பொறுத்தவரை 25-ம் தேதி வரை தமிழகக் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை நவ.24 மற்றும் 25 தேதிகளில் நகரின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நவ.24-ம் தேதி அன்று நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை முதல் மிக கனமழை கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கிறோம். காற்று, மழை இரண்டையும் எதிர்பார்க்கிறோம். நாளை 45 முதல் 50 கி.மீ. புயல் கரையைக் கடக்கும்போது நாளை மறுநாள் 100-லிருந்து 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
தமிழக அரசின் நிர்வாகத்துறையுடன் தொடர்பில் உள்ளோம். அனைத்துத் துறைகளுக்கும் தொடர்ந்து தகவல் தருகிறோம். சென்னையைப் பொறுத்தவரை 24, 25 தேதிகளில் கனமழை இருக்கும். புயல் கரையைக் கடக்கும்போது சூறாவளிபோல் சுழன்றடிக்கும்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.