தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, புயல் மற்றும் கடும் மழை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நாளை (நவ.25) பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிவர் புயல் நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து இன்று மாநிலப் பேரிடர் மேலாண்மை அலுவலகத்துக்கு வந்து முதல்வர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து நேற்றைய தினம் ஊடகம் வழியாகத் தெளிவாக அறிக்கை விட்டுள்ளேன். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. ஏழு மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் காரணமாக, கடும் மழை காரணமாக மாநிலம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுகிறது. தேவையைப் பொறுத்து பின்னர் முடிவெடுக்கப்படும். அத்தியாவசியப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் பணியாற்றுவார்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான இடங்களுக்குச் சென்றுள்ளன. போர்வை, பாய், உணவுப்பொருட்கள் அனைத்தும் தயாராக உள்ளன. குழந்தைகளுக்குப் பால் பொருட்கள் தயாராக உள்ளன. கடும் மழை உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையின்றி வெளியில் வரவேண்டாம். அரசு அறிவித்த நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஏரிகளைப் பராமரிக்க ஊழியர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். ஏரி உடைப்பு ஏற்பட்டால் சரி செய்யவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி 21 அடி உள்ளது. 24 அடி முழுக்கொள்ளளவு. 22 அடி வந்தால் திறக்கச் சொல்லி இருக்கிறோம். மழைப்பொழிவைப் பொறுத்து வெளியேற்றச் சொல்லி இருக்கிறோம். 22 அடிக்கு நிறுத்தச் சொல்லி இருக்கிறோம். அதைத் தாண்டி நீர் வர வர வெளியேற்றப்படும்.
எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாகச் சரிசெய்யத் தமிழக அரசு தயாராக உள்ளது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.