பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை: அஜித் பவாருக்கு சரத் பவார் பதில்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவார் நேற்று (சனிக்கிழமை) பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், இன்று டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த அஜித் பவார், தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், சரத் பவார்தான் தங்களது தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தரும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

சரத் பவார்தான் எங்கள் தலைவர்; என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்: அஜித் பவார் அதிரடி!

இந்நிலையில், அஜித் பவாரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டிவீட் செய்துள்ள சரத் பவார்,

“பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. மகாராஷ்டிராவில் அரசு அமைக்க சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

மக்கள் மத்தியில் தவறான பார்வையை உண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அஜித் பவார் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.