வடகொரியா விவகாரத்தில் படுத்தே விட்டாரய்யா ட்ரம்ப்!

வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் கூடாது என்பதே ட்ரம்பின் பிரார்த்தனையாம்!

 

வடகொரியாவுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

வடகொரியாவுடனும்,  அதன் தலைவர் ஜிம் ஜாங் உன்னுடனும் இனி பேச்சுக்கே இடமில்லை என முழங்கி வந்த ட்ரம்பின் குரலில் தற்போது சற்றே சூடு தணிந்துள்ளது. தென்கொரியாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப், அங்கு அந்நாட்டின் அதிபர் மூனுடன் பல கட்டப்பேச்சு வார்த்தைகளை நடத்தினார். முன்னதாக சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக  கூடிய தென் கொரிய மக்கள், “ட்ரம்பே திரும்பிப் போ”, “போர் குறித்து பேச வேண்டாம்” என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தென்கொரியா சென்ற ட்ரம்ப்பால், வழக்கமான போர் முழக்கத்தை அங்கு முன்வைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தே  தென் கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜே இ வெற்றிபெற்றார். ஆக, அதற்கேற்ப காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் மூன் உள்ள சூழலில், ட்ரம்பின் ஆவேச கூக்குரலுக்கு அவரால் இடமளிக்க முடியாமல் போனதில் வியப்பில்லை.  மேலும், வட கொரியா, தென் கொரியா இடையே பிரச்னைக்கு காரணமான பகுதிக்கு ட்ரம்ப் செல்வதாக இருந்தது. அங்கு கடும் பனி மூட்டம் நிலவுவதைக் காரணம் காட்டி அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். இவையெல்லாம், ட்ரம்பிற்கு உவப்பை அளிப்பதாக இல்லை. இறுதியாக, தென் கொரிய அதிபருடன் சேர்ந்து சியாலில் செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்த ட்ரம்ப், வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை எனத் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியா விரும்பினால் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதப் போரை கொரிய தீபகற்ப நாடுகள் மட்டுமின்றி, உலக நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை என்ற உண்மையை ட்ரம்ப் மெல்ல உணர தொடங்கி இருப்பதாகவே தெரிகிறது. அடுத்து சீனா செல்ல இருக்கும் ட்ரம்ப், அந்நாட்டின் அதிபர் ஜின் ஜோ அபேவையும் குளிர்விக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. வடகொரியாவுக்கு அதிக அளவில் ஆதரவளித்து வரும் நாடு சீனா. அதனை மட்டுப்படுத்தவே ட்ரம்ப் இந்த முறை சீனா செல்கிறார். ஆனால், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஜின் ஜோ அபே மிகவும் உதவியாக இருப்பதாக என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் அச்சுறுத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக உலக அளவிலான ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கும் மற்றொரு நாடான ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் தமக்கு ஆதரவளிக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஜப்பானில் ஆயுதங்களை வாங்கிக் குவியுங்கள், வடடகொரியாவை துவம்சம் செய்யுங்கள் என்று முழங்கிய ட்ரம்ப்பின் குரல், தென் கொரியாவுக்கு வந்த உடன் தணிந்து தொனிக்கத் தொடங்கி உள்ளது.  ஆக, வடகொரியாவுக்கு எதிரான தமது ஆவேச நிலைப்பாட்டை ட்ரம்ப் அடக்கி வாசிக்கத் தொடங்கி இருப்பது மட்டும் புரிகிறது. கெட்ட போரெனும் சூழல் மூன்றாம் உலகத்தை பீடிக்காமல் இருந்தால் சரிதான். 

 

No War Threats From Trump, Who Tells Koreans ‘It Will All Work Out’