இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம்.
அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன.
மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள்.
இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 10 கோடி இருக்கலாம். இவர்களில் பலருடைய ஒருநாள் வருமானம் அவர்களுடைய உணவுக்கே போதுமானதாக இருப்பதில்லை.
நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளோடு பட்டினி கிடந்து தாமாகவே சாக முன்வர வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா?
ஒவ்வொரு நகரத்திலும் நடைபாதையையோ பாலங்களுக்கு அடியில் உள்ள அசுத்தமான இடங்களையோ மட்டுமே தங்கள் வீடாகக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை அரசு மறந்துவிட்டதுபோல் தெரிகிறது.
கைவிடப்பட்ட வறியவர்கள்
‘சமூக விலக’லையும் ‘சுயதனிமை’யையும் மேற்கொள்ளுமாறு நாம் அறிவுறு த்தப்ப ட்டிருக் கிறோம்.
சேரிகளில் குறுகலான ஒற்றை அறைகளில் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் குடியிருப்புகளிலும் இது எப்படி சாத்தியமாகும்?
அல்லது அளவுக்கதிகமானோர் தங்கியிருக்கும் சுகாதாரமற்ற அரசுக் காப்பகங்களில் இருக்கும் வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்?
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்களில் இருக்கும் நிராதரவான மக்கள் என்ன செய்வார்கள்? நெரிசல் மிகுந்த சிறைகளில் உள்ள கைதிகளின் நிலை?
கொள்ளைநோய் இந்தியாவை மூழ்கடிக்கக்கூடிய சூழல் வருமானால் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு திறன் கொண்டதாக இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
பொதுச் சுகாதாரத்தில் இந்தியாவின் முதலீடு உலகத்திலேயே மிகவும் குறைவு. மேலும், பெரும்பாலான நகரங்களில் எந்த விதமான ஆரம்ப சுகாதார மையங்களும் இருப்பதில்லை.
பல மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகளோ ஊழியர்களோ பிற வசதிகளோ இருப்பதில்லை.
மிகச் சில மருத்துவமனைகள் தலா ஒரு வென்டிலேட்டரைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பொதுச் சுகாதார அமைப்பை நாடுவதையே விட்டுவிட்டார்கள்.
இருக்கும் மோசமான, குறைந்த அளவிலான சேவைகளை ஏழைகளுக்கு விட்டுவிட்டார்கள். இந்தக் கொள்ளைநோயானது விமானத்தில் பயணிக்கும் வசதி கொண்டோரால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதுதான் இதில் உள்ள முரண்நகை.
ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகுப்பைப் பாருங்கள். வெறும் இரண்டு நாள் சம்பளம், 5 கிலோ தானியத்தையும் கொண்டு வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டால்,
நமக்கு எதிர்காலம் எப்படிக் காட்சியளிக்கும்? ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையும் உணவும் திடீரென்று இல்லாமல்போன நிலையில்,
நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு நடந்துசெல்லும் காட்சி இந்த ஊரடங்கு எந்த அளவுக்குத் திறனற்றது என்பதைத் தெளிவாக நமக்குக் காட்டிவிடுகிறது.
இந்தக் கொள்ளைநோய் இந்தியாவை அடைந்து பல்கிப் பெருகும்வரை மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்துவது,
அதன் மூலம் சோதனைகள் மேற்கொள்வது போன்ற எதையுமே இந்திய அரசு சில மாதங்கள் செய்யாமல் சும்மா இருந்தது. உணவு, வேலை போன்றவற்றுக்கு அரசு அப்போதே திட்டமிட்டிருக்க வேண்டும்;
ஏழை மக்கள் பாதுகாப்பு, அவர்கள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டுக்குச் செல்வது, முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், நிராதரவானவர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பாதுகாப்பு போன்றவற்றையும் பற்றி யோசித்திருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
இரண்டு மாதங்களுக்கு நகரங்கள், கிராமங்களில் உள்ள முறைசார்ந்த பொருளாதாரத்துக்கு உட்படாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதமொன்றுக்கு 25 நாட்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் இரண்டு மடங்காக வழங்கப்பட வேண்டும். சேரிப் பகுதிகளுக்கு விலையில்லாத் தண்ணீர் வழங்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை இரண்டு மடங்காக்க வேண்டும். கூடுதலாக, வீடில்லாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்களுக்கும் சமைத்த உணவை வழங்குவது அவசரத் தேவை.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் மிகக் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களைத் தவிர அனைத்து விசாரணைக் கைதிகளும்,
சின்னச் சின்னக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுவரும் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
இந்தியா உடனடியாகத் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐ மருத்துவக் கட்டமைப்புக்குச் செலவிடுவதற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
இந்தத் திட்டம் அனைவருக்கும் இலவசமாக ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை மருத்துவ சேவையை வழங்குவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தத் தேவை உடனடியானது என்பதால், ஸ்பெயினும் நியூசிலாந்தும் தங்கள் தனியார் மருத்துவக் கட்டமைப்பை நாட்டுடைமையாக்கியதை இந்திய அரசாங்கமும் பின்பற்ற வேண்டும்.
எந்த நோயாளியும் கரோனாவுக்கான பரிசோதனைக்காகவோ சிகிச்சைக்காகவோ தனியார் மருத்துவமனை களிலிருந்து திருப்பியனுப்பப்படவும்,
அதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படவும் கூடாது என்பதற்காக அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.
ஒரு தரப்பு மக்கள் பணிப் பாதுகாப்பும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் மருத்துவக் காப்பீடும் உலகத் தரமான வீட்டுச் சூழலும் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பாதுகாப்பற்ற சூழலில், வேலைக்கு உத்தரவாதமற்ற நிலையில்,
அசுத்தமான வீட்டுச்சூழலில், தூய்மையான தண்ணீருக்கும் சுகாதார நிலைக்கும் மருத்துவ வசதிக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.
கரோனா பாதிப்புக்குப் பிந்தைய இந்தியாவில் இந்த நிலையை அகற்ற நாம் பாடுபடுவோமா? நம் நாட்டை மேலும் கருணை கொண்டதாக, நியாயமானதாக, சமத்துவம் கொண்டதாக இப்போதாவது ஆக்குவோமா?
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
நன்றி தி இந்து தமிழ்