வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. இனி வடகிழக்கு பருவ மழை தொடங்கும். வருகிற 26-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும்.
தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. பேரையூர், நாங்குநேரியில் தலா 9 செ.மீ, அரண்மனை புதூர், பெரியகுளத்தில் தலா 7 செ.மீ, மணிமுத்தாறு, மயிலாடி, ஸ்ரீவில்லிபுத்தூர், நாகர்கோவில், அம்பாசமுத்திரம், ராமேஸ்வரத்தில் தலா 5 செ.மீ, வத்ராப், சிவகிரி, ராஜபாளையம், கழுகுமலை, கொடைக்கானலில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.