வடகிழக்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பது பாஜகவின் முன்னுரிமை: பிரதமர் மோடி உறுதி..

வடகிழக்கு மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், அடையாளம் ஆகியவற்றை அனைத்து சூழல்களிலும் பாதுகாப்பதே பாஜக அரசின் முன்னுரிமை. என்னை நம்புங்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள்,

ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுராவில் கடந்த இரு நாட்கள் மக்களும், மாணவர்கள் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ரயில், விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இணையதளச் சேவையும் முடக்கப்பட்டு, காலவரையற்ற ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள 4-வது கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். தான்பாத் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

”நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது.

நான் ஒவ்வொரு மாநிலத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பழங்குடியின சமூகத்துக்கும்,

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கும் உறுதியளிப்பது என்னவென்றால் அவர்களின் கலாச்சாரம், மொழி, அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாக்க பாஜக அரசு முன்னுரிமை அளிக்கும்.

அசாம் மாநிலத்தில் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கை வாழும் விதம் ஆகியவற்றுக்கு எந்தவிதமான சேதமும் இல்லாமல் பாதுகாப்பேன்.

அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள எந்தப் பிரிவு மக்களுக்கும் இந்த மசோதாவால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இதுகுறித்துப் பலரும் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, அங்கிருந்து ஏராளமான கிறிஸ்தவக் குடும்பங்கள் இந்தியாவுக்கு தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு வந்தார்கள்.

ஆனால், அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

ஆனால் இன்று பாஜக அரசு லட்சக்கணக்கான மக்களுக்குக் குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டுவர முயன்றுள்ளது.

ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தலித்துகள், சீக்கியர்கள், கிறிஸ்தவக் குடும்பங்களுக்குக் குடியுரிமை வழங்குவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

தேசிய நலன் கருதி கடினமான முடிவுகள் எதையும் எடுக்காமல் காங்கிரஸ் கட்சி தவிர்த்துவிட்டது. தான்பாத், தியோகர், ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு தூசி, புகை ஆகியவற்றைத் தவிர வேறு ஏதும் அளிக்கவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகளை காங்கிரஸ் ஆட்சியின் போது வழங்கவில்லை.

வாக்கு வங்கியைப் பற்றி ஒருபோதும் நான் சந்தித்தது இல்லை. மக்களின் நலனுக்காகவே முழுமையாகவே நான் உழைத்து வருகிறேன்.

அயோத்தி விவகாரத்துக்குத் தீர்வு காணாமல் நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டது காங்கிரஸ் கட்சிதான். நாட்டு நலனுக்குரிய விஷயங்களைக் காங்கிரஸ் கட்சி 2-வது இடத்திலேயே வைத்திருந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் கிடப்பில் போட்டது. ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில்தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. எந்த விஷயமும் மோசமான கட்டத்துக்குச் செல்லாமல் வலிமையான முடிவுகளை எனது அரசு எடுக்கும்.

எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் அரசியலமைப்பின் 370-வது பிரிவை நீக்கினோம். அரசியலமைப்புச் சட்டம் ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் பொருந்துமாறு செய்துள்ளோம்.

அயோத்தி பாபர் மசூதி, ராம்ஜென்ம பூமி விஷயம் சுமுகமாகத் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தோம். அதுபோலவே செய்துள்ளோம்.

முத்தலாக் விஷயத்தில் முடிவு ஏதும் எடுத்தால் வாக்கு வங்கி குலைந்துவிடும் என்று அச்சத்தால் காங்கிரஸ் கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களின் நலனுக்காக முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம்”.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தெலுங்கானா என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு..

கரு..கரு.. கூந்தலுக்கு வெள்ளை கரிசலாங்கண்ணி..

Recent Posts