சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியிலும், எஸ். திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

நான் சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ அரசியல் செய்பவன் அல்ல. தேனி மக்களவைத் தொகுதியின் பிற வேட்பாளர்களை நான் போட்டியாளராக கருதவில்லை. மக்கள் குறைகள் என்னவென்று அறிந்து அதனைத் தீர்க்க முழு மூச்சோடு பாடுபடுவேன்.

50 வருட அரசியலில் கரைபடியாத கரம் என பெயர் எடுத்துவைத்திருப்பவன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரையே நேருக்குநேர் எதிர்கொண்டேன்.

தற்போதைய முதல்வர், துணை முதல்வரை கண்டு அஞ்சப்போவதில்லை. அவர்களை அவர்கள் இடத்திலேயே தோற்கடிப்பேன் என கூறினார்.