முக்கிய செய்திகள்

கொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…

கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மகளிர் தினம். அதன் பின்புலத்தில் சிந்திக்கவும் செயல்படவும் நிறைய இருக்கிறது. ஆணும் பெண்ணும் சரிநிகரெனக் கொண்டால் காதலர் தினம் மட்டும் ஏன் கசக்கிறது…

காதலைக் கொண்டாடும் இளைஞர்களும், யுவதிகளும் பொது வெளிகளில் அடிப்படைவாதிகளால் ஏன் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்? சமுதாயத்தில் காதல் குறித்த பொதுப்புத்தி என்ன?

காதலையும் காதலர் தினத்தையும் தூற்றுவதில் இந்து அடிப்படைவாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் எப்படி ஒன்றிணைகிறார்கள்? மிக எளிமையான இக்கேள்விகளுக்குப் பதில்களும் எளிமையாகவே இருக்கப்போகின்றன.

சமூகத்தை தட்டையாகப் புரிந்துகொள்ளும் மதவாதிகளுக்கு இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. அது எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும்கூட. காதலர் தினத்தன்று கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்விக்கும் அடிப்படைவாதிகள்தான்,

மழை பெய்யாவிட்டால் ஒரு கோவிலின் முன்பு  கழுதைக்கும், காளைக்கும் திருமணம் செய்விக்கிறார்கள். இரண்டு நிகழ்வுகளுமே அபத்தமானது,

மூடநம்பிக்கையின்பாற்பட்டது. பின்னது கடவுள் குறித்த மூட நம்பிக்கை எனில் முன்னது காதல் குறித்த மூட நம்பிக்கை. அதோடுகூட காதல் மீதான வெறுப்பும் கூட.

காதலர் தினம் குறித்த படு முட்டாள்தனமான பார்வை தென்னிந்திய  சமூகத்தின் மத பிற்போக்காளர்களிடம் மட்டுமே இன்னமும் இருந்து வருகிறது.ஏனென்றால் சாதிவெறியும் இப்பகுதியில்தான் மலிந்திருக்கிறது.

ஒரு  ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான காதல் சாதி பார்ப்பதில்லை. மதம் பார்ப்பதில்லை. எனவேதான் சாதிப் பித்தர்களான இந்து அடிப்படைவாதிகள் காதலை, காதல் திருமணத்தை எதிர்க்கிறார்கள்.

மதம் மீறிய திருமணங்கள் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்க்கிறார்கள். மொத்தத்தில் அச்சமே காதல் எதிர்ப்பிற்கு மூலமாக இருக்கிறது.

தன் குழந்தைகளின் மீதான அச்சம் அவர்கள் மீது வன்முறையை ஏவிவிடச் செய்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் என் உறவினரின் மகன் ஒருவருக்கும், வேறு ஒரு சாதியைச் சேர்ந்த (இருவரும் இடைநிலைச் சாதிகள்தான்.

அதாவது இருவரும் பிற்பட்ட சாதிகள்) பெண்ணுக்கும் இடையே காதல் திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை.

காவல்துறை வழக்கானது. இருவர் வீடுகளுக்குமான தொலைவு சில மீட்டர்கள் மட்டுமே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத சண்டையிட்டுக் கொண்டு,

உடல் நலம் கெட்டுக் கிடந்த இரண்டு வீட்டார்களும் இப்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணைந்து கொண்டனர் என்னும் செய்தியில் மகிழ்ச்சி துளிர்க்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வளவு மகிழ்ச்சியை, இன்பத்தை அவர்கள் இந்த காலத்தில் இழந்திருப்பார்கள்?

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து பொதுவெளிகளில் நடமாடுவது இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

கல்லூரிப் படிப்புகளில் அது அத்தியாவசியமானதாகவும் ஆகிப்போகிறது. நாட்டின் தலைநகர் தில்லியில் ஒரு ஆணுடன் இணைந்து பொதுவெளியில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையும்,

அவளுடைய இறப்பும் நம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது? பொதுவெளியில் ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வரும்போது அவர்களுக்கு ஏற்படும் அவமரியாதை இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு,

அது அவர்கள் மீதான கொடூரமான வன்முறையாக மாறுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து மகிழ்ந்து விட்டோம்.

அதைக் கூடிய விரைவில் நிறைவேற்றவும் போகிறோம். அதே நேரத்தில் ஆண் குறித்தும், பெண் குறித்தும், காதல் குறித்தும் இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் நஞ்சை விதைத்த கலாச்சாரக்  காவலர்களுக்கு என்ன தண்டனை?

இது ஆணும்,பெண்ணும் சேர்ந்து செல்வதை, சேர்ந்து இருப்பதை, சேர்ந்து படிப்பதைத் தடை செய்யும் தலிபானிஸம் மட்டுமல்ல. (சமீபத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தனது புகழ்மிக்க நூலகத்தில் மாணவிகள் படிப்பதைத் தடுத்து நிறுத்தியது.

நிர்வாகம் சொன்ன நகைப்புக்குரிய காரணம் என்ன தெரியுமா? மாணவிகள் படிக்க வருவதனால் மாணவர்களின் கூட்டம் அதிகமாகிவிடுகிறது).

பெண்ணின் வெளியை இல்லாமலாக்குவது.பல நூறு ஆண்டுகள் போராடி அவள் பெற்ற சிறு சுதந்திரத்தையும் பறித்து எடுப்பது.

சமூகத்தில் அவ்வப்பொழுது எட்டிப்பார்க்கும்  தாய்வழி இனச் சமூகக்கூறுகளை இல்லாதொழிப்பது.

இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் காதலுக்காக மட்டும் வாழ்வதில்லை.

தேசத்தை மதரீதியாக பிளவுபடுத்தக்கூடிய  குடியுரிமை சட்டத்  திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்த்து  நடக்கும்

போராட்டங்களிலும் கூட அவர்கள் இணைந்தே பங்கேற்கிறார்கள். சமீபத்திய ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலில் தனது சக ஆண் மாணவர்களைக்  காப்பற்றியதே மாணவிகள்தான்.

பொது இடங்களில் ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து இருந்தால் அவர்கள் என்ன மாதிரியான உறவுக்காரர்களாக இருக்கவேண்டும் என்பது தொடங்கி காதலர் தினங்கள், மகளிர் தினங்கள், கல்லூரி விழாக்கள், காஃபி கடைகள் வரை பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும்,

யாருடன் சேர்ந்து அமரவேண்டும், காஃபி குடிக்க வேண்டும் என்பது வரை கலாச்சார வரையறைகள் சமூகத்தில் வகுக்கப்படுகின்றன.

குடும்பத்திலிருந்து தொடங்கும் இந்த கட்டுப்பாடுகள் பின்னர் கலாச்சாரக் காவலர்களின் தடிகளில் முடிவடைகிறது.

காதலர் தினத்தன்று பொது வெளிகளில் இணைந்து செல்லும் ஆணையும்,பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது,

கல்லூரி காஃபி ஷாப்களில் புகுந்து தகராறு செய்வது இவையெல்லாம் கலாச்சாரக் காவலர்களின் பொழுதுபோக்குகள்.

பெண் என்பவள் ஆணின் போகப்பொருள். அவனின் சொத்து. அவனின் தனி உடைமை என்னும் உளுத்துப்போன, கெட்டித்தட்டிப்போன தந்தை வழி சமூகக் கருத்துகள் சாதாரண ஒரு மனிதனின் மூளையில் ஏறிவிட்டாலே நிகழும் கொடுமைகளை சொல்லி மாளாது.

இக்கருத்துகள் கலாசாரக் காவலர்களின் ஆன்மாவில் உள்நுழைந்து விட்டால் கேட்கவாவேண்டும்?

ஒரு சில வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். கொச்சியின் காஃபி ஷாப் ஒன்றில் உள்நுழைந்த கலாச்சாரக் காவலர்கள், மாணவர்கள் மீது கடும்  தாக்குதல் நடத்தினார்கள்.

மாணவர்கள் அதற்கு எதிர்வினையாக “kiss of love” என்னும் முத்தப்போராட்டத்தை நடத்திக்காட்டினார்கள்.

அப்போராட்ட வடிவம் இந்தியா முழுவதிலும் உள்ள மெட்ரோ நகரங்களின் உயர் கல்வி நிலையங்களுக்குப் பரவி தீவிரமடைந்தது.

தில்லியின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் எதிரில் திரண்ட 300க்கும் மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் முத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐ.ஐ.டியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காறித்துப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அடிப்படைவாதிகள். கலாச்சாரக் காவலர்களுக்கு எதிராக மாணவர்கள் போராடுவது தவறில்லை.போராடத்தான் வேண்டும்.

ஆனால் அவர்களின் கருத்து நிலையை எதிர்த்தப் போராட்டமாக அது இருக்கவேண்டும்.

நன்றி தினமணி