முக்கிய செய்திகள்

இந்த மூன்று பேர் மட்டுமா… அமைச்சர்கள் பலரும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள்தான்

தற்போது புகாருக்கு ஆளாகி உள்ள 3 எம்எல்ஏக்கள் மட்டுமின்றி, மேலும் பல அதிமுக அமைச்சர்களும் கூட டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் தான் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கட்சியின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் நேற்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், 3 எம்ஏல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரனை, அதே கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  3 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம், தேர்தலை சந்திப்போம் என்று கூறினார். மேலும், தங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இன்னும் உள்ளதாகவும், அவர்கள் அமைச்சர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.